Tuesday, January 17, 2012

அரசியல் - ஒரு அறிமுகம்


இந்த தலைப்பிற்குள் செல்லும் முன்னர், நான் தமிழில் மேற்கத்திய சிந்தனைகள், அல்லது மொழிபெயர்ப்பின் துணை கொண்டு அயல் நாட்டு அறிவை அறிந்துக் கொள்ளுவதில் உள்ள நடைமுறை சிக்கலை சித்தரிக்க விரும்புகிறேன். உதாரணமாக ,அரசு - என்றால் ஆங்கிலத்தில் " State" என்று குறிக்கப் படும். இன்றைய காலத்தில் "இந்தியா", அல்லது "சிறிலங்கா" அல்லது அனைத்துலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள்(பாலஸ்தீனம் நீங்கலாக) அனைத்தும் அரசு என்ற அமைப்பே. சொல்லப் போனால், அரசியல் அறிவியல் மொழியில், தமிழ் நாட்டு அரசு என்பது தவறு. அது அரசாங்கம் என்றிருக்க வேண்டும். அது போலவே, ஜாதி என்பதை "சமுதாயம்" என்று பொதுவாக குறிப்பிடப் பட்டுகிறது. இதுவும் பிழையே. ஜாதி என்பது வேறு, அறிவியல் ரீதியாக "சமுதாயம்" என்பது முற்றிலும் வேறு. மற்றொரு உதாரணாமாக "Computer " என்ற ஆங்கில  சொல்லின்  தமிழாக்கத்தை பார்க்கலாம். சிலர் "கணினி" என்றும் , மற்றும் சிலர் "கணிப் பொறி" என்றும் அதனை மொழிமாற்றம் செய்வர். தமிழ் வழியில் உயர் கல்வி அதுவும் தொழில் நுட்பக் கல்வி, மருத்துவம் மற்றும் மேற்கத்திய தத்துவங்கள் பயில்வதில் உள்ள தலையாய சவாலே, இந்த மொழிபெயர்ப்பில் உள்ள ஒருமை இன்மைதான்( Lack of Standardization). கலைச் சொற்களின் உருவாக்கம் ஒரு பொதுவான மொழி நடைக்கு மக்களை இட்டுச் செல்லவேண்டும். ஆனால் தமிழிலேயே, தமிழ் நாட்டவர் தமிழ் (காபி), தனித்தமிழ் ( கொட்டை வடி நீர்), ஈழத்தமிழ் ( கோப்பி) என்று வழங்கப் படுவது, உரைநடைக்கு சாதியப் படலாம், ஆனால் எழுத்து வடிவத்தில், மொழி பெயர்ப்பில் அது மிகப் பெரும் சிக்கலை தந்துவிடும். பாருங்களேன், அரசியல் அல்லது அரசு சார் அறிவியல் (Political Science) என்பதே தமிழ் நாட்டில் சென்னைப் பல்கலைகழகத்தில் " அரசியல்" என்றும்,  அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் "அரசியல் அறிவியல் என்று2009ம் ஆண்டு வரையும், அதன் பின்னர் அரசறிவியல் என்றும், மதுரை காமராசர் பல்கலைகழத்தில், "அரசியல் விஞ்ஞானம்" என்ற பெயரிலும். யாழ்ப்பாண பல்கலையில் ஆரம்ப காலம் தொட்டே "அரசறிவியல்" என்றும் அழைக்கப் படுகிறது. 
இந்த கலைசொலாகத்தில் உள்ள வேறுபாடுகளை முதலில்நாம் களைய வேண்டும். தமிழ் வழியில் போதிக்கும் உயர் கல்விச்சாலைகள் முதலில் ஒன்றிணைய வேண்டும் ( ஆகிற கதையா இது என்று நீங்கள் புன்முறுவல் பூப்பதை அறிவேன்).
இந்த சிறிய அறிமுக உரையோடு, நான் "மேற்கத்திய அரசியல் சிந்தனை" குறித்த கட்டுரைகளின் உள் செல்கிறேன். உங்களுக்கு எவ்வித  ஐயப்பாடு  எழுந்தாலும், பின்னூட்டம் மூலம் உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். எனது வேலைப் பளுவினைக் கணக்கில் கொண்டு, வாரம் ஓரிரு பதிவுகளை செய்யலாம் என்று நினைக்கிறன்.
மீண்டும் சந்திப்போம். 

3 comments:

  1. ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. நீங்கள் யார். உங்கள் தகமை என்ன என்பனவற்றை அறியத்தந்தால் படிப்பவர்களுக்கு உங்கள் கட்டுரைகள் மீது நம்பிக்கை அதிகமாகும் என்று நினைக்கிறேன்.
    காபியை தமிழில் சொல்லிப் பார்த்தேன் .. சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. :-)

    ReplyDelete
    Replies
    1. "கொட்டை வடி நீர்" என்பது "காரணப் பெயராக" இருக்கிறது, மொழி வளர "இடுகுறிப் பெயர்களே தேவை" என்று ஒரு சில பண்டிதர்கள் காபியை, "குளம்பி" ( ஏன் என்றால் காபிக் கோட்டையை நிமிர்த்திப் போட்டால், கால்நடையின் குளம்பு போன்று உள்ளதாம்) என்று கூட பெயரிட்டனர். இதன் முன்னோடி , முனைவர் தமிழ்குடிமகன் அவர்கள். தேத்தண்ணி, இன்றும் தேநீர் என்றும், தனித்தமிழ் ஆதரவர்களால் "சுவை நீர்" என்றும் வழங்கப் படுகிறது. இந்த பிரச்சினையின் அடிநாதம், "நான் அல்லது நாங்கள் சொல்வதே சரி" என்ற தமிழர்களின் அடையாளமான பிடிவாத குணமே.

      Delete
  2. Super prof. My cognitive domain is being increased after reading this

    ReplyDelete