Tuesday, January 17, 2012

அரசியல் - ஒரு அறிமுகம்


இந்த தலைப்பிற்குள் செல்லும் முன்னர், நான் தமிழில் மேற்கத்திய சிந்தனைகள், அல்லது மொழிபெயர்ப்பின் துணை கொண்டு அயல் நாட்டு அறிவை அறிந்துக் கொள்ளுவதில் உள்ள நடைமுறை சிக்கலை சித்தரிக்க விரும்புகிறேன். உதாரணமாக ,அரசு - என்றால் ஆங்கிலத்தில் " State" என்று குறிக்கப் படும். இன்றைய காலத்தில் "இந்தியா", அல்லது "சிறிலங்கா" அல்லது அனைத்துலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள்(பாலஸ்தீனம் நீங்கலாக) அனைத்தும் அரசு என்ற அமைப்பே. சொல்லப் போனால், அரசியல் அறிவியல் மொழியில், தமிழ் நாட்டு அரசு என்பது தவறு. அது அரசாங்கம் என்றிருக்க வேண்டும். அது போலவே, ஜாதி என்பதை "சமுதாயம்" என்று பொதுவாக குறிப்பிடப் பட்டுகிறது. இதுவும் பிழையே. ஜாதி என்பது வேறு, அறிவியல் ரீதியாக "சமுதாயம்" என்பது முற்றிலும் வேறு. மற்றொரு உதாரணாமாக "Computer " என்ற ஆங்கில  சொல்லின்  தமிழாக்கத்தை பார்க்கலாம். சிலர் "கணினி" என்றும் , மற்றும் சிலர் "கணிப் பொறி" என்றும் அதனை மொழிமாற்றம் செய்வர். தமிழ் வழியில் உயர் கல்வி அதுவும் தொழில் நுட்பக் கல்வி, மருத்துவம் மற்றும் மேற்கத்திய தத்துவங்கள் பயில்வதில் உள்ள தலையாய சவாலே, இந்த மொழிபெயர்ப்பில் உள்ள ஒருமை இன்மைதான்( Lack of Standardization). கலைச் சொற்களின் உருவாக்கம் ஒரு பொதுவான மொழி நடைக்கு மக்களை இட்டுச் செல்லவேண்டும். ஆனால் தமிழிலேயே, தமிழ் நாட்டவர் தமிழ் (காபி), தனித்தமிழ் ( கொட்டை வடி நீர்), ஈழத்தமிழ் ( கோப்பி) என்று வழங்கப் படுவது, உரைநடைக்கு சாதியப் படலாம், ஆனால் எழுத்து வடிவத்தில், மொழி பெயர்ப்பில் அது மிகப் பெரும் சிக்கலை தந்துவிடும். பாருங்களேன், அரசியல் அல்லது அரசு சார் அறிவியல் (Political Science) என்பதே தமிழ் நாட்டில் சென்னைப் பல்கலைகழகத்தில் " அரசியல்" என்றும்,  அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் "அரசியல் அறிவியல் என்று2009ம் ஆண்டு வரையும், அதன் பின்னர் அரசறிவியல் என்றும், மதுரை காமராசர் பல்கலைகழத்தில், "அரசியல் விஞ்ஞானம்" என்ற பெயரிலும். யாழ்ப்பாண பல்கலையில் ஆரம்ப காலம் தொட்டே "அரசறிவியல்" என்றும் அழைக்கப் படுகிறது. 
இந்த கலைசொலாகத்தில் உள்ள வேறுபாடுகளை முதலில்நாம் களைய வேண்டும். தமிழ் வழியில் போதிக்கும் உயர் கல்விச்சாலைகள் முதலில் ஒன்றிணைய வேண்டும் ( ஆகிற கதையா இது என்று நீங்கள் புன்முறுவல் பூப்பதை அறிவேன்).
இந்த சிறிய அறிமுக உரையோடு, நான் "மேற்கத்திய அரசியல் சிந்தனை" குறித்த கட்டுரைகளின் உள் செல்கிறேன். உங்களுக்கு எவ்வித  ஐயப்பாடு  எழுந்தாலும், பின்னூட்டம் மூலம் உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். எனது வேலைப் பளுவினைக் கணக்கில் கொண்டு, வாரம் ஓரிரு பதிவுகளை செய்யலாம் என்று நினைக்கிறன்.
மீண்டும் சந்திப்போம். 

Sunday, January 15, 2012

அரசியலின் அரசியல்

அரசியல் என்கிற  சொற்பதமும் நானும் 
             சிறு வயது முதலே எனக்கு நன்கு அறிமுகமான, ஆனால் அந்த வயதில் புரிந்து கொள்ள இயலாத சொற்களில் "அரசியல்" என்ற சொற்பதமும் உண்டு. தெருவோர தேநீர்க் கடைகளில் கொட்டை எழுத்துக்களில் "இங்கு அரசியல் பேசாதீர்கள்" என்று எழுதி இருக்கும். அரசியல் கட்சிகள், சாதி அரசியல், அப்போது முதலே தமிழக காங்கிரசில் கோஷ்டி அரசியல், அறிஞர் பெர்னார்ட் ஷா கூறியதாக "அரசியல் ஒரு சாக்கடை" என்ற விளக்கம் என்று பல்வேறு பரிமாணங்களில்  இந்த சொல் "அரசியல்" எனக்கு அறிமுகமானது.   மெல்ல மெல்ல புற உலகின் இயக்கவிதிகளை புரிந்து கொண்டபோது, அரசியல் கட்சிகள், கட்சிக் காரர்கள் என விரிவடைந்தது தெரிந்தது.ஆனாலும் அது என்ன அரசியல்? அரசியல் கட்சிகள் என்று திராவிட முன்னேற்றக் கழகமும்( தி.மு.க), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்(அ.தி.மு.க) (வாயில்  ழகரம் வராத பாவிகள் , கழகத்தை "கலகம்" என்று வேறு உச்சரித்து ஒரு புது வித பொருளையும் தருவர்). தி.மு.க அப்போது எதிர்கட்சி, அ.தி.மு.க ஆளும் கட்சி.என்ன காரணத்தினால் இவை ஒன்றை ஒன்று எதிர்த்தன என்ற கேள்வி எனக்கு தோன்றினாலும் எனக்கு அதனை கேட்கத் தெரியவில்லை (உணவில் உப்பு அதிகம் அல்லது குறைவு அதனால் சுவை குன்றியது என்று சொல்ல தெரியாதது போல).தேசிய கட்சிகளாக இந்திய தேசிய காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம் என கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகமானாலும் இந்த அரசியல் கட்சிகளின் ஏன் ஒரே கட்சியாக இருக்கவில்லை? எதனால் இவர்கள் வெவ்வேறு பெயர்களில் இயங்குகிறார்கள்  என்ற வினாவிற்கு விடை என்னுடைய பதிமூன்றாவது வயது வரை தெரியவே இல்லை.
மேற்கத்திய அரசியல் சிந்தனைகளின் அறிமுகம் 
         ஒரு வழியாக நான் ஏழாம் வகுப்பு பயிலும் போது, எனது அக்கா( அவர் ஒரு அரசு நிதி பெரும் நடுநிலைப்  பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார்) அஞ்சல் வழியில் சென்னைப் பல்கலையில் இளங்கலை வரலாறு பயின்றார். அவருக்கு இரண்டாம் ஆண்டு பாடமாக "அரசியல் கோட்பாடு" என்று ஒரு பாடம் இருந்தது.அரசியல் கோட்பாடு குறித்து எளிய தமிழில்எழுதப்பட்ட ஒரு கையேடும் அவர் வைத்திருந்தார். அதனை மிகுந்த ஆவலோடு புரட்டிப் பார்த்தால், எனக்கு  ஏமாற்றமே மிஞ்சியது. 
பனமரத்துல வவ்வாலா? தலைவருக்கே சவாலா?, 
இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? முதலியன தொடங்கி,  நான் கண்ட தி.மு.க, அண்ணா தி. மு.க பற்றி அங்கே எந்த குறிப்பும் இல்லை. அதற்கு நேர் மாறாக, கிரேக்க நகர அரசில் தொடங்கி, ரோமானிய சாம்ராஜ்யம் தொட்டு, மனித வரலாற்றில் மிகவும் போற்றுதலுக்குரிய அரசியல் தத்துவ ஞானியர் மற்றும் அவர்களது தத்துவங்கள் அதில்  விவரிக்கப்பட்டிருந்தன. 
அரசியல் சிந்தனையாளர்கள் 
          சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், லாக், ரூசோ,பெந்தம், மாக்கியவல்லி, ஹெகெல் என வாசிக்க வாசிக்க அதில் ஒரு இன்பம் இருப்பதை உணர்ந்தேன். மெல்ல மெல்ல "அரசியல்" என்பது "அரசறிவியல்" என்பது புலனானது. பிற்காலத்தில் அரசியல் பாடம் படிபதே எனது முழு நேரத் தொழிலாகும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
அரசு, சந்தை, சமுதாயம், சமூகம், குடும்பம் என்ற நிறுவனங்களின் ஆதார அமைப்பும் புரிந்தது. அரசியல் மனிதனின் அடையாளம் என்பதும் அது ஒரு உயரிய அறிவு சார்ந்த விடயம் என்று தெளிவாக தெரிந்தது. நம்மை சுற்றி உள்ள உலகம் நமக்கு புரியவைகின்றவாறு "அரசியல்"  என்றால் "மொள்ள மாறித்தனம்"   இல்லை என்னதே சர்வ நிச்சயமாக உணர்ந்தேன். 
           சாக்ரடீஸ் 'அரசியல்' என்பதை "ஒழுங்கு" என்று போதித்ததையும், பிளாட்டோ இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு நாட்டின் அரசியலை வழி நடத்த அரசன் ஒரு தத்துவ ஞானி-அரசனாக இருத்தல் அவசியம் என்று அறுதி இட்டு கூறியது நிச்சயம் 'அரசியல்' இங்கே நம்மவர்கள் புரிந்து கொண்டது போல் "கோல் மால்" சம்பந்தப் பட்டது இல்லவே இல்லை என்பதை தெள்ளதெளிவாக தெரிந்து கொண்டேன்.
         அரசியல் என்பது அரசு எனும் மாட்சிமை பெற்ற அமைப்பினை குறித்த அறிவு, அது அரசறிவியல் என்று யாழ்பாணம் பல்கலைகழகத்தில் கற்பிக்கப்படுவதை பின் நாட்களில் அறிந்தேன். அரசியல், அரசியல் அறிவியல்,அரசறிவியல் இவை அனைத்தும் ஒன்றே என்பது விளங்கியது.
 அரசின் அங்கங்கள் என நான்கு உண்டு, இதை வழி நடத்த ஒரு பண்பட்ட மனிதன் தேவை. மக்கள் எவ்வழி, மன்னன் அவ்வழி என்றெல்லாம் சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கே முன்னரே கிரேக்க நாட்டில் தத்துவ ஞானியர் அவதானித்துள்ளனர் என்று வாசித்து தெளிந்தேன். மேற்கத்திய அரசியல் சிந்தனைகளின் நீட்சியாகவே இந்திய மற்றும் பல கீழை நாடுகளில் நவீன அரசமைப்புகள் காலனியாதிக்கத்திற்கு பின்பு ஏற்பட்டன என்றாலும், அரசியல் சிந்தனைகள் குறித்த நூல்கள் தமிழில் ஒன்றிரண்டைத்தவிர இல்லை என்பது ஒரு சோகமான செய்தி. அரசியல் என்பதன் பொருள் மாறி இங்கு ஒளிபதன் காரணம் அதாக கூட இருக்கலாம். இந்த வலைப் பூவில் மேற்கத்திய அரசியல் சிந்தனைகள் குறித்து முதலில் எழுத விழைகிறேன். 
சரி, அப்படி என்றால் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள , உங்கள் ஊர் "அரசியல்" என்பது என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த வினாவிற்கு விடை தரும் முன்பு, மேற்கத்திய அரசியல் சிந்தனைகளை சற்று உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விழைகிறேன். இந்த கருத்துப் பரிமாற்றத்தின் நோக்கம் நான் பெற்ற தெளிவினை இந்த தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு செல்லவே! 
உங்கள் மேலான கருத்துகளும், ஊக்கமும் எனக்கு மிகவும் தேவை
வாருங்கள் கருத்துப் பரிமாறிக் கொள்ளலாம் 

Saturday, January 14, 2012

உள்ளே வரலாமா?


வணக்கம் அன்பு உள்ளங்களே! 
வான் அறிவியலாளர்கள் சொல்வதைப் போல் என்றும் விரிவடையும் இந்த பிரபஞ்சத்தினைப் போல, நாளும் விரியும் இந்த இணைய உலகில், ஒரு வலைப் பூ எழுத்தனாக நானும் வந்துள்ளேன்.
கலை, இலக்கியம், வரலாறு, அரசியல்,பொருளாதாரம் என நான் பார்க்கும் உலகை உங்களோடு பகிர விரும்புகிறேன். தைத்திங்கள் முதல் நாளில் இந்தப் பாமரன் எழுதத்தொடங்குவான்.
உங்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தைத்திருநாள் வாழ்த்துக்கள்.